இது குறித்து அமிரா தஸ்தூர் கூறியதாவது: அருமையான கதையம்சத்துடன் அமைந்திருக்கும் தில்லி தொடரின் கதை என்னை மிகவும் ஈர்த்தது. சிறந்த நடிகரான சயீப் அலிகானுடன் பணியாற்றுவது உலக அளவில் அங்கீகாரத்தை பெற உதவும். எனவே இந்தக் கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க சம்மதித்தேன்.
இந்தத் தொடரில் நடித்த பிறகு இந்திய அரசியில் பற்றி எனது அறிவு விரிவடைந்துள்ளது. முழுக்க அரசியல் சார்ந்த கதையாக இருப்பதால் தொடரில் நடிக்கும் அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது.
அரசியல் உலகில் நிகழும் விளையாட்டுகள், நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக ‘தில்லி’ வெப் சீரிஸ் உருவாகி வருகிறது.
இந்த தொடரில் எனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல் மொத்த கதையும் எனக்கு தெரியும். அனைத்து கேரக்டர்களின் கதையும் வாசித்துள்ளேன். ஏனென்றால் இந்தக் கதையில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், மொத்த தொடரும் மக்கள் நினைவிலிருந்து அகலாமல் இருக்கும் என்று கூறினார்.
இந்தத் தொடரில் சுனில் குரோவர், கெளகர் கான், முகமத் ஸீஷான் அயுப் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். தனுஷின் ‘அனேகன்’ படத்தில் நடித்து பிரபலமான அமிரா தஸ்தூர், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ‘தி ட்ரிப்’ என்ற தொடர் மூலம் வெப் சீரிஸில் அடியெடுத்து வைத்த இவர், அடுத்ததாக ‘தில்லி’ தொடரில் நடித்து வருகிறார்.