தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது முறையாக ஆலோசிக்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
கொரோனா பரவலை தடுக்க போதுமான நிதி உதவியையும் மாநில முதல்வர்கள் கோரி இருந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாத நிலையில் பெரும்பாலும் ஊரடங்கு நீட்டிக்கப் படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகின்றது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்க படுவது உறுதியாகியுள்ளது.