அமெரிக்காவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் பாம்பை விரட்டுவதற்காக எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பூல்ஸ்வில்லேயில் அதிக விஷ பாம்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது அவர் அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருப்பதை மறந்து பாம்பை விரட்டுவதற்காக நெருப்பு புகையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக வீட்டில் உள்ள பொருட்களில் தீ பற்றிக் கொண்டதால் வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் வெகுநேரமாக போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்திலும் வீட்டிற்குள் புகுந்த பாம்பின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த பாம்பை பிடித்த தீயணைப்பு படையினர் அதனை பாதுகாப்பாக கொண்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர். ஆனால் வீட்டின் உரிமையாளர் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சோகத்தில் மூழ்கியுள்ளார்.