கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை கண்காணித்தனர். அதில், யானைக்கு வாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.
காயத்தை குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் டாக்டர் சுகுமார் தலைமையில் வலி நிவாரணி மாத்திரைகள், பலாப்பழம் மற்றும் வாழைப்பழத்தில் வைத்து இன்று காலை வழங்கப்பட்டது. வாய்ப்புண்ணை குணமாக்கும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் யானையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது.