சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசினார். அதில், கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். Aarogya Setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாக உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது உள்ளிட்ட அம்சங்களை மோடி பேசினார்.