நிர்பயா பாலியல் வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். இதனால் தூக்குத் தண்டனையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜனவரி 31 மாலை உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் இந்தத் தீர்பை எதிர்த்து திகார் சிறைச்சிறை அலுவலர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி அவசர வழக்காக மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு டி.என். பட்டேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா வாதங்களை கேட்டு இதுகுறித்து விளக்கமளிக்க, திகார் சிறைத் துறைக்கும் , குற்றவாளிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை (2 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஒத்திவைத்தார்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி விடுமுறை நாள் ((ஞாயிற்றுக்கிழமை) என்றாலும் கூட சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் பல்வேறு முக்கிய வாதங்கள் முன்வைக்கப் பட்டது. குற்றவாளிகளுக்கும் ஒரே நேரத்தில் மரண தண்டனை கொடுக்கலாமா ? அல்லது தனித்தனியாக நிறைவேற்றலாமா போன்ற பல்வேறு வாதங்களை மத்திய அரசு முன்வைக்கின்றது.