சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,778 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் உறவினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.