அணையில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனூரை சேர்ந்தவர் முத்துகுமார். முத்துகுமாரின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் சென்றுள்ளார். ஆனால் குற்றால அருவியில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர்கள் செங்கோட்டை அருகே உள்ள அணை பகுதிக்கு குளிக்க சென்றனர். அங்குள்ள மோட்டை அணையில் முத்துக்குமார் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது முத்துக்குமார் திடீரென்று தண்ணீரிலிருந்து மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் இணைந்து அணையில் முத்துக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை மோட்டை அணையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் காவல்துறையினர் முத்துகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.