பிகில் பட வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
கடந்த 5ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 32 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நடிகர் விஜய் மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரின் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையின்போது அன்பு செழியன் வீட்டில் 77 கோடி, அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடிகர் விஜய், சினிமா தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் அன்புச்செழியன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விஜய் தரப்பில் ஆடிட்டர் ஆஜராகினார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயலாளரும் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும், கடந்த 12-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார். இதுவரையில் அன்புச்செழியன் ஆஜராகாமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அன்புச்செழியன் நுங்கம்பாக்கம் வருமானத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட 77 கோடி பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் ஆடிட்டர், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தற்போது அன்பு செழியன் ஆஜராகியுள்ளார்.