பா.ம.க வின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், வானொலி நிலையங்கள் முடக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பணியை இழப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
பா.ம.க வின் இளைஞரணித்தலைவரான அன்புமணி ராமதாஸ், இது தொடர்பில் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நெல்லை, கோவை, புதுவை, திருச்சி மற்றும் மதுரை போன்ற வானொலி நிலையங்களில் தயாரிக்கப்படும் சொந்த நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையோடு முடக்கிவிட்டு, அதனை தொடர் ஒளிபரப்பு நிலையங்களாக தரம் குறைப்பதற்கு பிரசார்பாரதி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், வானொலி நிலையங்களை மூடக்கூடிய இத்தீர்மானம் கைவிடப்பட வேண்டும், என்று கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி அன்று கூறியிருந்தோம். அப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என்று பிரசார்பாரதி விளக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அத்திட்டத்திற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கிறது.
ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதும் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வானொலி நிலையங்கள் முடக்கப்படும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பணியை இழப்பார்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அந்த வானொலி நிலையங்களை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.