சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் விவசாயிகளின் பயத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
பா.ம.கவின் இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பில் அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில், சுமார் 7000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்.
எனவே தான், இதனை பா.ம.க ஆரம்பத்திலிருந்து எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பின் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் மு.க ஸ்டாலின் பிரதமரை சந்தித்து தமிழகத்தில் 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியிருந்தார். இது தான் தமிழக அரசாங்கத்தின் நிலை எனில், உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி நில எடுப்பு நடவடிக்கை செய்ய வேண்டியிருக்கிறது என்று தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் அலுவலர் தெரிவித்திருக்க வேண்டியதில்லை.
இந்த 8 வழி சாலை திட்டம் குறித்த தமிழக விவசாயிகளின் பயத்தை தமிழ்நாடு அரசு போக்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் 8 வழிச் சாலை திட்டம் அனுமதிக்கப்படாது என்று அரசாங்கம் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இதற்கு மாறாக எட்டு வழி சாலை திட்டம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் மற்றும் சட்ட போராட்டங்களை பா.ம.க மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.