பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருச்சியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளிலிருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கும் 10 கலை கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.
அதனை எதிர்த்து திருவரங்கம் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. அக்கல்லூரியில் பணியாற்றுபவர்கள் கடந்த 6-ஆம் தேதியிலிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களோடு, அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழகமோ பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வராமல் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மிரட்டல் விடுத்து வருகிறது. அவர்களது கோரிக்கை நியாயமானது. 15,000 தான் அவர்களது மாதச் சம்பளம். அதையும் கடந்த நான்கு மாதங்களாக கொடுக்கவில்லை.
இந்நிலையில், அவர்களால் போராட்டத்தை தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவர்கள் அனைவரும் கடந்த 15 வருடங்களாக இந்த கல்லூரியில் வேலை செய்து எதிர்காலத்தை தொலைத்திருக்கிறார்கள். அவர்களால் வேறு பணிக்கு இனி போக முடியாது. அவர்களை போராட்டம் நடத்தவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நியாயம் கிடையாது.
தமிழ்நாடு முழுக்க சுமார் 41 கல்லூரிகளில் இருக்கும் 1500க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கும் நிலை இது தான். பேராசிரியர்கள் என்னும் பெருமையை சுமந்துகொண்டு, வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கௌரவ விரிவுரையாளர்களது, இந்த துன்பத்திற்கு அரசு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இருக்கும் போட்டி தான் காரணம். கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசாங்கம் தான் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தான் இந்த சிக்கலுக்கு காரணம்.