ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு காரணம் ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நோயின் காரணமாக 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நோய் எப்படி பரவியது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர்.
இப்போது எய்ம்ஸ் தனது முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் காணப்பட்ட அதிகப்படியான நிக்கலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் எனத் தெரிவித்துள்ளனர். இவை காய்கறிகள் மூலம் சென்றதா, தண்ணீர் மூலம் சென்றதா என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.