ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மதத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தனது அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமானது என்றும், மதம், சாதி, பிராந்திய வேறுபாடின்றி மக்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், கொரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு நாளொன்றுக்கு ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிதி தடைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு மசூதிக்கும் அரசாங்கம் 5,000 ரூபாயை வழங்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
அதேபோல தேவாலயங்கள், கோயில்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுதவிர, நிதி பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசாங்கம் ரூ.1,000 கொடுத்து மாதத்திற்கு மூன்று முறை ரேஷன் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில், இன்று 35 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அனந்த்பூர் மற்றும் கிருஷ்ணாவில் தலா 3, குண்டூரில் 9, கடப்பாவில் 6, கர்னூலில் 10 மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 4 பேருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்புகளை எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.