பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆத்தூர் ஐயாநகர் பகுதியில் கந்தசாமியின் மகன் முருகன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் முருகனின் மகன் கார்த்திக் என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கார்த்திக்கிற்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. ஆனால் கார்த்திக் சென்னைக்கு செல்ல விரும்பாமல் தூத்துக்குடியில் தான் வேலைக்கு போவதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் முருகன், மகனை கண்டித்தபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வேதனையடைந்த கார்த்திக் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கார்த்திக்கை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.