Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அங்கே போயிட்டு வாரேன்” என்ஜினீயர் பெண்ணின் கதி என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

காணாமல் போன பெண் என்ஜினீயர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் ஆற்றோரம் தெருவில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சுமிதா என்ற மகள் இருந்தார். இவர் பி.டெக். படித்த பட்டதாரி ஆவார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு போவதாக சுமிதா குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து சுமிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் சுமிதா செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன என்ஜினீயர் சுமிதா பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பாக காணாமல் போன சுமிதா பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது சுமிதாவுக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த சரண்குமார் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு நேரத்தில் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

இதற்கிடையில் சரண்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அவருடைய திருமண நிச்சயதார்த்தம் குறித்து தெரிந்துகொண்ட சுமிதா அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சுமிதா விழுப்புரத்திற்கு சென்று தனது காதலன் சரண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சரண்குமாரின் திருமணம் நின்று விட்டது. இந்த நிலையில்தான் சுமிதா சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு காணாமல் போய் விட்டார். ஆகவே சரண்குமார் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் விழுப்புரம் சென்றபோது அங்கு சரண்குமார் இல்லை.

இதனால் அவருடைய பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது சரண்குமார் வெளியூர் சென்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் விசாரணைக்கு சேலம் வருமாறு பெற்றோரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். எனவே தலைமறைவாக உள்ள சரண்குமாரிடம் விசாரணை நடத்திய பின்பு தான் சுமிதாவின் நிலைமை குறித்த விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சுமிதாவின் தோழிகளிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுமிதா வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |