நகை வியாபாரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அராபாத் பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் கழுத்தை வெட்டிய நிலையில் பிணமாக கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் இவர் யார் என்பதை பற்றி எந்த விபரமும் யாருக்கும் தெரியவில்லை. எனவே காவல்துறையினர் அப்பகுதியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த கார் யாருடையது என்று விசாரித்த போது அது இறந்தவருடையது என்பது தெரியவந்துள்ளது .
இதனையடுத்து காவல்துறையினர் காரை வைத்து நடத்திய விசாரணையில் இறந்தவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் வசித்த நகை வியாபாரியான செந்தில் குமார் என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி அன்று செந்தில்குமார் தனது மனைவியிடம் சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு நகையை வாங்கிகொண்டு வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் செந்தில்குமார் யாரை சந்தித்து பணம் கொடுத்திருப்பார் என்றும் எதனால் இவரை குளத்தின் அருகே கொடூரமா கொலை செய்துள்ளனர் என்ற விபரம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.