தோட்டத்திற்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரெகுராமபுரம் பகுதியில் விவசாயியான சுப்புராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் வீட்டிற்கு தெரியாமல் அதிகமான கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை சுப்புராஜ் கட்ட முடியாமல் தவித்ததால் பணம் கொடுத்தவர்கள் அதனை அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சுப்புராஜின் குடும்பத்தினர் நீங்களே கடனை செலுத்த வேண்டும் என்று திட்டி உள்ளனர். இதனால் சுப்புராஜ் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் சுப்புராஜ் தனது வீட்டில் உள்ளவர்களிடம் தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து சுப்புராஜ் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுப்புராஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.