குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு சந்தோஷ்குமார் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் அவரது மனைவி அன்னலட்சுமி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதற்குப்பின் மனைவி பிரிந்து சென்றதால் சந்தோஷ்குமார் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கி இருந்த சந்தொஷ்குமாரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.