ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் வாலிபரின் சடலம் கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் “உயிரிழந்தவர் மன்னார்குடி தெப்பக் குளம் பாரதிதாசன் தெருவில் வசித்து வந்த சத்யன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து வந்த நிலையில் அந்த தெப்பக்குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம்” என்பது தெரியவந்துள்ளது. மேலும் சத்யன் இறந்ததற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.