சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பெரியார் நகர் மாரியம்மன் கோவில் வீதியில் நடராஜ் மகன் பழனிச்சாமி வசித்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் பழனிச்சாமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இவர் கோபி புகழேந்தி வீதியில் உள்ள ஒரு தையல் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் வருடம் பழனிச்சாமி கடையில் இருந்தார். அப்போது ஒரு தம்பதியின் 5 வயது சிறுமி கடையின் அருகில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சிறுமியை பழனிசாமி அவரது கடைக்குள் தூக்கிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
அதே வேளையில் சிறுமியின் தாயார் அங்கு வந்ததால் உடனடியாக பழனிச்சாமி சிறுமியை கடைக்கு வெளியில் விட்டுவிட்டார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது 5 வயது சிறுமியை கடைக்குள் கடத்தி சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் பழனிசாமிக்கு விதிக்கப்பட்டது.
மேலும் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றத்திற்காக பழனிசாமிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் என மொத்தம் 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி விதித்தார். இந்த தண்டனைகளை பழனிச்சாமி ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராதம் தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி ஆர்.மாலதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு மாத காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.