மெரினாவில் உயிரிழப்பை தடுப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது .
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி மண்டல இயக்குனர் சரண்யா, கடலோர காவல் படை துணை தலைவர் மகாபாத்ரா, கடலோர காவல்படை மீட்பு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பு அதிகாரி கமாண் டர் பீம்சிங் கோத்தாரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக திட்ட இயக்குனர் புஷ்பராஜ், சுகாதார திட்ட இயக்குனர் உமா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அந்த கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோரம் பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.சந்தீப் மிட்டல் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்புத் துறையினரையும், மீட்பு துறையினரையும் ஒருங்கிணைத்து கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் அந்த கடற்கரை உயிர்காப்பு பிரிவில் கூடுதலாக 12 பயிற்சி பெற்ற மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் அண்ணா நினைவிடம், காந்தி சிலை மற்றும் எலியட் கடற்கரை பகுதிகளில் அதிக இறப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு பயிற்சி பெற்ற உயிர்காப்பு படையினர் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கடற்கரையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கவும், கண்காணிக்கவும் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி மெரினா கடற்கரை பகுதிகளில் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவசர உயிர்காக்கும் சேவைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம், கடலோர காவல்படை, தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உயிரிழப்புகள் இல்லாதவாறு சென்னை மெரினா கடற்கரையை உருவாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்பின் காவல்துறையில் ஆயுதப்படை போலீசார் 50 பேருக்கு உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து அவர்களையும் கூடுதலாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த பயிற்சி பெற்று கொண்ட தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் 044-28447752 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.