அஞ்சுகிராமம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி உஷா (37) கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய இரண்டு மகன்களையும் நாகர்கோவிலில் இருக்கின்ற அக்கா வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு உஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் வெளியே தூக்கி வீசப்பட்டு கிடந்தன. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, பிரேஸ்லெட், வளையல் என 13 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொடி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை கண்காணித்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதேசமயத்தில் கைரேகை நிபுணர்கள் அழைத்துவரப்பட்டு அங்கு பதிவாகியிருந்த ரேகைகள் கைப்பற்றப்பட்டன.இதுபற்றி அஞ்சுகிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த விசாரணைக்காக அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.