மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பாங்காக்: மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு
எதிரான வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது, வன்முறையை தூண்டியது போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் வழக்கில் புதிய சாட்சியத்திட்டம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதில் ஆங் சான் சூகி மீது ஊழல் உட்பட கடும் குற்றப் பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 75 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கும் நீதிமன்றம் 90 மற்றும் 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊழல் வழக்கில் கயின் மாகாண முன்னாள் திட்டமிடல் துறை அமைச்சர் தான் நயிங்குக்கு 90 ஆண்டுகளும், மாகாணத்தின் முன்னாள் பெண் முதல்வர் நான் கீன்ட்வே மியின்டுக்கு 75 வருடங்களும் விதித்து நீதிமன்றம் இந்த மாதம் உத்தரவிட்டது.
அதற்கு முன்பாக தேசத் துரோக குற்றச்சாட்டில் ஆங் சான் சூகியின் நெருக்கமான உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் மாதம் மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. அதன்பின் அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபரான வின் மியின்ட் போன்ற முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.