அங்கன்வாடியில் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அகர சோழதரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மையத்தில் குழந்தைகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அங்கன்வாடி மையத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து காலையில் ஊழியர்கள் அங்கன்வாடி மையத்தை திறக்க வந்த போது ஜன்னல் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு அருகில் இருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கன்வாடியில் வைத்திருந்த பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.