வாழும் தெய்வமான அன்னையை போற்றும் பொருட்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சிறப்புமிக்க தினத்தில் அன்னையின் ஆசீர்வாதத்தை பெறுவது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. அவர்களுக்கு பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து ஆசீர்வாதத்தை பெறலாம்.
உலக நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் அன்னையர் தினம், நமது நாட்டில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவரால் முதன்முதலில் அன்னையர் தினம் அறிவிக்கப்பட்டது. அதிக நாடுகளில் இந்த தினத்தில் தான் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
நல்ல மனிதர்களை உருவாக்கி சமுதாயத்திற்கு கொடுப்பதும் அன்னையே. தீயவழியில் செல்லும் குழந்தையை திருத்தி நல்வழிப் படுத்துவதும் அன்னையே. இன்றைய தினத்தில் அன்னை செய்த தியாகங்களை நினைத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடி மகிழலாம். ஈன்ற பொழுதை விட தன் பிள்ளையை சான்றோன் எனக் கேட்டால் மகிழ்வாள். குற்றம் செய்தவன் என சொல்லக் கேட்டால் வருந்துவாள்.
ஆனால் ஒருபோதும் பிள்ளைகளை வெறுத்து ஒதுக்க மாட்டாள். இந்த உயர்ந்த தாய் உள்ளத்தை எத்தனை பேர் நம்மில் போற்றி பாராட்டுகிறோம் ? வருடம் முழுவதும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு இந்த தினத்தில் ஓய்வு கொடுக்கலாம். காலையில் அன்னை செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டு பூக்களோடு அவர்களை எழுப்பினால் உங்கள் அன்பில் அவர்கள் பூரித்துப் போவார்கள்.
வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவருக்கு பிடித்தமான உணவை சமைத்துப் பரிமாறலாம். வீட்டிற்கு அவர் விரும்பும் உணவு பொருட்களை வரச்செய்து மகிழ்ச்சி படுத்தலாம் அன்பை மட்டுமே செலுத்தி அரவணைத்து கொண்டுசெல்லும் அன்னைக்கு இந்த புண்ணிய தினத்தில் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றை பரிசாகக் கொடுத்து அவர்களது ஆசியைப் பெற வாழ்வு சிறக்கும்.