மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில் அண்ணனின் கண்முன்னே தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன்நாடானுர் பகுதியில் அயோத்தி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகனும், பட்டப்படிப்பு படித்து முடித்த பொன்ஷீலா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பொன் ஷீலா ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் மற்றும் பொன்ஷீலாவும் துணிக்கடைக்கு துணி எடுப்பதற்காக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வராஜூவும், பொன்ஷீலாவும் துணிக்கடையில் துணி எடுத்து விட்டு அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று வந்து எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். ஆனால் பொன்ஷீலா பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்ஷீலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.