இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க கூடாது எனவும் அந்த பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாகிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அதற்கு வேலைவாய்ப்பும் பெற முடியாது எனவும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் அறிவித்தது.
இந்திய அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி மற்றும் வருத்தம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்திய பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட அறிவிப்பிற்கு பாகிஸ்தான் அரசு அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் மீதிருக்கும் வன்மத்தினால், இந்தியா எந்தவித கூச்சமும் இல்லாமல் மாணவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு தரமான கல்வியை கற்க முடியாத வகையில் செயல்படுகிறது. இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் நாங்கள் விளக்கம் கேட்டிருக்கிறோம். இந்திய அரசின் விளக்கம் தர முடியாத, ஒரு தலைபட்ச நடவடிக்கைக்காக தகுந்த பதில் நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தானிற்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளது.