நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக அ.தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் முதல் முதலில் சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிவித்து களத்தில் நேரடியாக இறங்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு பலர் விருப்பம் தெரிவித்துவருவதால் அவர்களுக்குள் யார் சீட்டை பெறுவது என்று போட்டியே நிலவி வருகிறது. ஆனால் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய காரியமல்ல. இந்நிலையில் மற்ற கட்சிகள் களத்திற்கு வர தயாராகி கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிக் போராடிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.