அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகாமையிலிருக்கும் பூங்குளம் மற்றும் கல்லரப்பட்டி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கல்லரப்பட்டி சின்னபையன் என்பவர் வீட்டிலும் மற்றும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.