Categories
அரசியல்

மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா… பல நாட்கள் கழித்து இத்தனை பேரா… அதிர்ச்சியில் தமிழகம்..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 6,352 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,09,238 ல் இருந்து 4,15,590 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,050 ல் இருந்து 7,137 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 6,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,49,682 ல் இருந்து 3,55,727 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 78,973 பேருக்கு செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 44,99,670 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 52,726 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக  இருப்பதால் மக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். அதேபோல கடந்த 29 நாட்களாக பாதிப்பு  6 ஆயிரத்தை தாண்டாத நிலையில், இன்று 6 ஆயிரத்தை கடந்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

Categories

Tech |