தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், பாரதியார், பெரியார், வேளாண் பல் கலைக்கழகம் உள்பட எட்டு பல்கலைக் கழகங்களிடம் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 106 பேராசிரியர் பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனால், இந்த பல்கலைக்கழகங்களில் 29 இடங் கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2,398 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 20 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், 1996 ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து நிரப்ப உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி தமிழக உயர் கல்வித் துறை செயலாளருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருக்கும், கல்லூரி கல்வி இயக்குனருக்கும், மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கும் உத்தரவிட்டது.