இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரா நகரில் பிரபாகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டி உள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருப்பூர் சங்கராபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் உதயகுமார் மற்றும் லட்சுமணன் என்பவர்கள் பிரபாகரனை அரிவாளால் வெட்டியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, உதயகுமார் குடிபோதையில் அருவாளுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததால் பிரபாகரன் அவரை கண்டித்ததோடு, அவர் வேலை பார்த்த பனியன் நிறுவனத்திலும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் தனியார் நிறுவனம் உதயகுமாரை வேலையை விட்டு நீக்கியதால் கோபமடைந்த உதயகுமார் பழிவாங்கும் எண்ணத்தோடு பிரபாகரனை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது.