மருந்துக்கடையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு 2 வாலிபர்கள் சென்று உள்ளனர். அவர்கள் 2 பேரும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களிடம் போதை மாத்திரையை கேட்டுள்ளனர். ஆனால் மருந்து கடையில் இருந்த ஒரு பெண் ஊழியர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் மருந்து கடைக்குள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களிடம் அரிவாளை காட்டி தகராறு செய்துள்ளனர்.
இதன் காரணமாக மருந்து கடையில் இருந்த பெண் ஊழியர்கள் அங்கு இருந்து அடித்துப் பிடித்து வெளியே ஓடினர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் 2 பேரும் மருந்து கடைக்குள் புகுந்து சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதன்பின் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மேற்பார்வையில் காவல்துறையினர் அந்த வாலிபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மகாராஜசமுத்திரம் காட்டாறு பகுதியில் அந்த வாலிபர்கள் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது வாலிபர்கள் இருவரும் காட்டாறு பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டனர். இதனால் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ்க்கு வலது கால் முறிந்தது. மேலும் பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு வலது கை முடிந்து விட்டது.
அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைதொடர்ந்து ராஜேஷ் மற்றும் ஹரிஹரன் கைது செய்யப்பட்டதோடு அவர்களை 14 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். அதன்பின் 2 பேரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா பாராட்டினார்.