தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், தேச துரோகிகளையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும் என முழக்கமிட்டு பேசினார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது புகாரளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதற்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக பாஜக சுற்றுலா துறை அமைச்சர் சி.டி ரவி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் & யாகூப் மேமன் மரணத்தை எதிர்ப்பவர்கள்,
துக்டே துக்தே கும்பலை ஆதரிப்பவர்கள் மற்றும் #CAA க்கு எதிராக பொய்களைப் பரப்பும் தீவிரவாதிகள் குறித்து தான் அனுராக் தாக்கூர் பேசினார். தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.