நபர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்கு ஆண்டி வைரஸ் என்று பெயர் வைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் மக்கள் சிக்கி கொண்டு வரும் நிலையில் பல பகுதிகளில் இது தொடர்பான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிட் , கொரோனா என்று பெயர் வைத்திருந்தனர். அதேபோன்று தற்போது மீண்டும் ஒரு பெயர் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்காம்பூர் எனும் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடை உரிமையாளர் “Antivirus Tiffen Center” என்ற பெயர் வைத்திருக்கிறார். இதனால் இந்த உணவகத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கடைக்கு வைக்கப்பட்ட பெயரை வைத்து நெட்டிசன்கள் காமெடியாக பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதை கலாய்க்கும் விதமாக நெட்டிசன் ஒருவர் “இந்த கடையில் நீங்கள் ஆண்டி வைரஸ் தோசை சாப்பிட்டால் உங்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதனால் நீங்கள் சமூக இடைவெளியையோ அல்லது முக கவசமோ அணிய வேண்டியதில்லை” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து பெயரை வைத்து பிரபலமானவர்கள் வரிசையில் இந்த ஹோட்டலின் உரிமையாளர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.