அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மர அறுவை ஆலைக்கு வனத்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டுவந்த மர அறுவை ஆலைகளை தணிக்கை செய்யும் பணியில் வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின்படி, உதவி வனப்பாதுகாவலர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது டி.வீரப்பள்ளி கிராமத்தில் வேலு என்பவரின் மகன் அசோக் அனுமதியின்றி மர அறுவை ஆலையை நடத்தி வருவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி பட்டியலின மரங்களை இருப்பு வைத்திருந்தார்.
இதனையடுத்து அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த மர அறுவை ஆலையை வனச்சரக அலுவலர் எம். பிரபு அடைத்து “சீல்” வைத்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இதேபோன்று அனுமதி இன்றி செயல்பட்டு வரும் மர அறுவை ஆலைகளில் இருப்பு கணக்குகள் முறையாக பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவது தெரியவந்தால் மர அறுவை ஆலைகள் அடைத்து “சீல்” வைக்க உத்தரவிடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.