தென்காசியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்து விட்டனர் .
மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பொக்லைன் டிரைவர் பால்வண்ணநாதர் பகுதியில் வசிக்கும் ராமராஜ் என்பதும், டிப்பர் லாரி டிரைவர் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அனுமதி இல்லாமல் மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.