ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்வது குறித்து தனது விருப்பத்தை கூறிய அமெரிக்காவை, அதில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் தொடங்கியுள்ளனர்.
ஈரான், ஜெர்மனி மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது. அவ்வாறு கையெழுத்தான ஒப்பந்தத்தில் தன்னுடைய அணு சக்திக்கான திட்டம், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு அல்ல என்பதை உறுதி செய்வதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்தது.
அதற்கு பதிலாக வல்லரசு நாடுகள் ஈரான் நாட்டின் மீது பொருளாதார ரீதியாக விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவதாக ஒப்புக்கொண்டது. இதனையடுத்து அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஒபாமா ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அவருடைய ஆட்சிக்காலத்தில் அறிவித்துள்ளார். மேலும் ஈரான் நாட்டின் மீது மீண்டும் பொருளாதார ரீதியான தடைகளை விதித்தார்.
ஆனால் தற்போது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடன் ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மாநாடு வியன்னாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று அமெரிக்காவை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைப்பதற்கு தீவிரமாக விவாதிக்கபட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.