ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,000 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவுசெய்துள்ளனர். இருந்தாலும் வறுமை மற்றும் பல்வேறு கால உள்ளூர் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பு காரணமாக கொரோனா பாதிப்பு குறைவான அளவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஒரு கோடி மக்கள் கொரோனாவிற்கு ஆளாகி இருக்கலாம் என நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு நாடு முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9500 பேர் மீது ஆண்டிபாடி பரிசோதனை செய்ததில் இத்தகைய முடிவுகள் வெளியாகி இருப்பதாக கூறியுள்ளனர். இதுபற்றி அமைச்சர் அஹ்மத் ஜவாத் உஸ்மானி கூறுகையில், இந்த கணக்கெடுப்பின் மூலம் நகரில் உள்ள பெரும்பாலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தலைநகர் காபூல் பகுதியில் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ளது. அதே சமயத்தில் பல்வேறு பாதிப்புகள் அறிகுறி இல்லாமல் இருக்கின்றன என நம்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.