ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தரீன்கோட் நகரில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நீண்ட ஆண்டுகளாக அரசிற்கு எதிரான போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகும், அதில் குறிப்பிட்ட முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை கந்தஹார் மாகாணத்தில் பாஞ்ச்வாய் மாவட்டத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்ததில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி அன்று கந்தஹார் மாகாணத்தில் ஆர்கிஸ்தான் மாவட்டத்தில் சாலையோரம் கண்ணி வெடிகள் வெடிக்க செய்ததில், 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.