ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்கர்கள் அனைவரும் இன்னும் 2 வாரங்களில் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்று அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பின், அங்கு தலிபான்கள் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றினர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் தலிபான்கள் அங்கு ஆட்சியிலிருந்த ஜனநாயகம் அரசை அகற்றி விட்டு புதிதாக இடைக்கால அரசினை அமைத்தனர்.
இவ்வாறு தலிபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தலிபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக அழைத்து வந்தனர்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் மீதமிருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் இன்னும் 2 வாரங்களில் முழுமையாக மீட்கப்பட இருக்கின்றனர். இந்த தகவலை அமெரிக்க அரசின் மேலாண்மையும், வளங்களுக்கான மாநில துணை செயலாளரான பிரையன் மெக்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரையன் மெக்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் நாட்டில் 439 அமெரிக்க மக்கள் இருக்கின்றனர். அவர்களில் 363 நபர்களுடன் தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களில் 176 நபர்கள் மட்டுமே அமெரிக்கா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக” அவர் தெரிவித்துள்ளார்.