தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (டிஜிபி), தூத்துக்குடி எஸ்.பி. காணொலி மூலம் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.