அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2020 மார்ச் , ஏப்ரல் மாதம் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்க வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தங்கள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் எடுத்துரைக்க வேண்டும். உடல் குறைபாட்டின் அடிப்படையில் தேர்வெழுத சலுகைகள் கேட்கும் மாணவரிடம் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையின் நகல் அல்லது மருத்துவக் குழுவின் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை பள்ளித் தலைமையாசிரியர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, பத்தாம் வகுப்பு , 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வின் போது தேர்வெழுத சலுகைகள் பெற்ற தேர்வர்கள், சலுகை பெற்ற ஆணையின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். எனவே, வருகின்ற 31ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அவ்வாறு தாமதமாக விண்ணப்பங்கள் பெறும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.முதன்மைக் கல்வி அலுவலர்களால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மட்டுமே பரிசீலிக்கப்படும், முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.