திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த பர்சை பார்த்துள்ளார். அப்போது பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருமாரியம்மாள் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். அப்போது அந்தப் பர்சில் 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் ஆகியவை இருந்ததாக தெரிவித்தார். இந்தத் தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் மற்றும் நவமணி ஆகியோர் தனது ஜீப்பில் விரைந்து சென்று அந்த அரசுப் பேருந்தை சிவகிரி அருகே நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது திருடிய மர்ம நபர் தான் மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து பர்சை நைசாக பேருந்தில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
அதன் பிறகு பேருந்தில் கிடந்த பரிசை எடுத்து பார்த்த போலீசார் அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் பணம் ,செல்போன் ஆகியவற்றை மீட்டு அரைமணிநேரத்தில் கருமாரியம்மாளிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு திருட்டுப்போன தங்கநகையை அரைமணிநேரத்தில் விரைந்து சென்று மீட்ட போலீஸ்காரரை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மனதார பாராட்டி உள்ளனர்.