மது போதையில் மூதாட்டியை கொன்று விட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்-மதிமுனியம்மாள். பெருமாள் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி மதிமுனியம்மாள்(90) மட்டும் தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் செய்து வந்தார் . இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜா மது அருந்திவிட்டு மூதாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த மூதாட்டியிடம் ராஜா நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார் .
அப்போது மூதாட்டி சத்தம் போட்டதால் கோபமடைந்த ராஜா அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில் தன்னை காவல்துறையினர் தேடுவதை அறிந்த ராஜா கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். மூதாட்டியை அடித்துக் கொலை செய்த ராஜாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.