12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி இன்று முதல் தொடங்குகிறது.
புரோ கபடி லீக் போட்டி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மேலும் கபடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இந்த திருவிழாவை காணும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் கடைசியாக கடந்த 2019 -ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் தட்டிச்சென்றது .ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கபடி போட்டி நடைபெறவில்லை .இந்நிலையில் 8-வது புரோ கபடி லீக் போட்டி இன்று முதல் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், மும்பை, பெங்களூரு புல்ஸ் மற்றும் தபாங் டெல்லி, புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இதில் லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய 4 அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதே சமயம் கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டியை நேரில் காண ரசிகர்கள் அனுமதி இல்லை .இதில் தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சுர்ஜீத் சிங் மற்றும் துணை கேப்டன் பிரபஞ்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளன.
கடந்த 3 முறையும் லீக் சுற்றை தாண்டாத தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் எழுச்சி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் .இந்நிலையில் இது குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதயகுமார் கூறும்போது,” அணியில் உடல் தகுதியும் ,வலிமையும் மிக்க இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளோம் .அதிக முயற்சி எடுத்து வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அதே சமயம் புதிய திட்டங்களையும் வகுத்துள்ளோம் . இந்த அணி நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-மும்பை மோதுகின்றன. இதன்பிறகு இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணியும் , 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோத்தா அணியும் மோதுகின்றன.இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.