கால தாமதத்திற்கான காரணம் அளிக்காததால் அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம் விதித்து நிதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சூளையில் இருக்கும் சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமுடைய சொத்துக்களை குத்தகைக்கு எடுத்து தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலைத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடவடிக்கையை விரைவுப்படுத்த கடந்த 2021-ஆம் வருடம் ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன்பின் உத்தரவை அமுல்படுத்தாமல் இருப்பதாக சுகுமார் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும், வேண்டும் என்றே ஐகோர்ட் உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவியாளர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. மேலும் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவியாளர் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை.
எனவே இவரது நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாதது என கூறி இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு 1 லட்ச ரூபாயும் மற்றும் உதவி, இணை ஆணையர்களுக்கு தலா 5௦,௦௦௦ ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அபராத தொகையை 2 வாரங்களில் சென்னை அடையார் பகுதியில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.