ஜப்பான் இளவரசி சாதாரண குடிமகனை மணப்பதால் கடைசியாக அரச குடும்ப அந்தஸ்துடன் இன்று பிறந்தநாள் கொண்டாடினார்.
ஜப்பான் இளவரசி மகோ கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவரான கெய் கோமுரோவை காதலித்தார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்ற சாதாரண நபர்களை திருமணம் செய்தால் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். இந்த முடிவை இளவரசி மகோ காதலனை கரம் பிடிக்க வேண்டி மனதார ஏற்று, அரசு நிதியுதவியும் தனக்கு வேண்டாம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து வருகிற செவ்வாய்க்கிழமை அன்று இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இளவரசி மகோ தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்ற முறையில் இளவரசி மகோ கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகும். தற்போது, இளவரசி தனது தங்கையுடன் அரச குடும்ப வளாகத்தில் நடந்துசெல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இளவரசி மகோ அவரது பிறந்தநாள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் தன்னுடைய உயர்ந்த காதலுக்காக மகோ எடுத்த முடிவு இன்றுவரை அந்நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தனது காதலுக்காக அரச குடும்ப அந்தஸ்தை இழக்க உள்ள மகோ, ஜப்பான் இளவரசியாக தனது 30 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.