கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் வேளச்சேரி பகுதிக்கு சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருப்பர்கள் அரசு மற்றும் உள்ளாட்சி பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த பணியாளர்களின் இடைவிடாத பணியே. ஆடாத மழையிலும் விடாது பணியாற்றிய அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சி முடித்துவிட்டு மதுரையிலிருந்து சென்னை வந்த நான் வேளச்சேரி கல்வி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்.மேலும் இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டுத்தக்கது”என்று அவர் பதிவிட்டுள்ளார்.